புலிகளின் இராணுவத் தோல்விக்கான காரணங்கள் எவை? தொடர் - 22
தாமரை காருண்யன்
ஈழம் தோல்வி கண்டதா? தோற்கடிக்கப்பட்டதா?
கடந்த அங்கத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பை மேற்குலகிலிருந்து தனிமைப்படுத்த சிறிலங்கா அரசு வகுத்திருந்த வியூகம் பற்றி நோக்கியிருந்தோம்.
இவ்வங்கத்தில் புலிகள் அமைப்பு சமர்களில் இராணுவரீதியான தோல்வியினைத் தழுவிக் கொண்டமைக்கான காரணங்களைப் பற்றி நோக்குவோம்.
புலிகள் அமைப்பின் இராணுவத் தோல்விக்கான 10 காரணங்களை இக் கட்டுரை அடையாளம் காண்கிறது.
இவை ஒன்றோடு ஒன்று தொடர்புபட்ட வகையில் முள்ளிவாய்க்காலின் இறுதிக் கணங்கள்வரை புலிகள் அமைப்பின் இராணுவத் தோல்விக்கு காரணமாக அமைந்துள்ளன.
விடுதலைப்புலிகள் அமைப்பு போன்ற ஒரு பலம் வாய்ந்த அமைப்பின் இராணுவத் தோல்வி இராணுவக் காரணங்களால் மட்டும் ஏற்படுவதில்லை.
அவை அரசியல் தோல்வியின் விளைவில் இருந்தும்தான் ஆரம்பிக்கின்றன.
விடுதலைப்புலிகள் அமைப்பின் இராணுவத் தோல்வியும் அரசியல் தோல்வியில் இருந்துதான் ஆரம்பிக்கிறது.
ஆனால் இவ் அரசியல் தோல்விக்கான முழுக் காரணமும் விடுதலைப்புலிகள் அமைப்புத்தான் என்று கூறிவிடமுடியாது.
உலக ஒழுங்கு அரசுகளுக்கு சார்பாக அமைந்திருந்த சூழலும் சிறிலங்கா அரசும், இந்தியா, சீனா மற்றும் மேற்குலக நாடுகள் வகித்த பாத்திரமும் இவர்கள் தமது நலன்கள் அடிப்படையில் மட்டும் தமிழரின் தேசியப் பிரச்சினையினை அணுகியமையும் விடுதலைப்புலிகள் அமைப்பு அரசியல் ரீதியாகத் தனிமைப்பட்டுப்போய் அரசியல் தோல்வியினை சந்திக்கும் சூழ்நிலையை ஏற்படுத்தியிருந்தது.
முன்னர் ஒரு கட்டுரையில் படித்திருந்ததைப் போல, யானைகள் மோதினாலும் புல்லுக்குத்தான் சேதம், புணர்ந்தாலும் புல்லுக்குத்தான் சேதம் என்பது அனைத்துலக அரசியல் சித்து விளையாட்டுப்பரப்பில் ஈழத்தமிழர் தேசத்துக்கும் விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் நன்கு பொருந்தி நிற்கிறது.
என்ன காரணத்தாலும் நாம் அனைத்துலக ரீதியில் தனிமைப்பட்டுப் போகும்போதும் அதன் சேதமும் எம்மையே முழுமையாகத் தாக்கி நிற்கிறது. இதற்கான விலையையும் நாமே செலுத்த வேண்டி ஏற்படுகிறது.
விடுதலைப்புலிகள் அமைப்பு இராணுவத் தோல்வியினைத் தழுவியமைக்கான காரணங்களை அனைத்துலக ரீதியாக புலிகள் அமைப்புத் தனிமைப்பட்டுப்போன நிலையில் இருந்து நோக்க ஆரம்பிப்போம்.
இதுவே இத் தோல்விக்கான முதற்காரணமாகவும் அமைகிறது.
ஈழத் தமிழர் தேசமும் விடுதலைப்புலிகள் அமைப்பும் சிங்கள தேசத்தையும் சிங்களப் படையணிகளையும் விட மரபுசார்ந்த அர்த்தத்தில் மிகப் பலம் குறைந்தது.
இருந்த போதும் பல்வேறு வகையான மரபுசாராத அம்சங்களால் ஒருவகையான வலுச் சமநிலையை விடுதலைப்புலிகள் அமைப்பால் பேண முடிந்தது.
நான்காவது கட்ட ஈழப்போரில் விடுதலைப்புலிகள் அமைப்பு இராணுவ ரீதியான வெற்றிகளை அடைந்து கொள்வதற்கு எதிராக முழு உலக நாடுகளும் செயற்பட்டன.
அளவுகளில் வேறுபட்டாலும், பல நாடுகள் நேரடியாக இராணுவ உதவிகள் வழங்காவிட்டாலும் விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் அவை சிறிலங்கா அரசுக்கு அரணாகச் செயற்பட்டன.
இந் நிலமை விடுதலைப்புலிகள் அமைப்புக்கு இராணுவ ரீதியாக மிகவும் பாதகமானதாகவும் சிறிலங்கா அரசுக்கு மிகவும் சாதகமாகவும் அமைந்திருந்தது.
உலகத்தையே எதிர்த்து தனித்து நின்று வெல்வது என்பது பிரகடனங்களுக்கு உதவும் அளவுக்கு களவெற்றிகளுக்கு உதவுவதில்லை.
இரண்டாவது, போருக்கான ஆட்பலப் பற்றாக்குறை.
விடுதலைப்புலிகள் அமைப்புக்கு ஆட்பலப் பற்றாக்குறையென்பது புதியதொரு பிரச்சனை அல்ல.
விடுதலைப்புலிகள் அமைப்பின் அனைத்து மரபு சார்ந்த சமர்களும் ஆட்பலப் பற்றாக்குறையுடன்தான் நடைபெற்றிருக்கின்றன.
ஜெயசிக்குறு சமரும் மிகுந்த ஆட்பலப் பற்றாக்குறையுடன்தான் நடைபெற்றது.
ஆனால் 4ம் கட்ட ஈழப்போரின் பரிமாணம் மிகப் பெரியது. அதன் தீவிரத் தன்மையும் மிகவும் நெருக்கடியானது.
தளபதி தீபன் இதனை 'நாம் ஒரே நேரத்தில் மூன்று ஜெயசிக்குறுக்களைச் சந்திக்கிறோம்' என்று வர்ணித்திருந்தார். இது ஒரு சத்தியமான வார்த்தை.
இத்தகைய போரைச் சந்திப்பதற்கு கிழக்கில் இருந்து ஆட்பலம் திரட்ட முடியாத நிலை கருணா பிரிவுக்குப் பின்னர் உருவாகியிருந்தது.
யாழ்ப்பாணத்தில் இருந்தும் திரட்டி எடுக்க முடியாதநிலை இராணுவ இறுக்கங்களாலும், போக்குவரத்துத் தடைகளாலும் ஏற்பட்டிருந்தது.
தமிழ்நாட்டில் இருந்து திரட்டி எடுக்கும் வாய்ப்பு றோவின் ஊடுருவல் அச்சத்தினால் தவிர்க்கப்பட்டிருந்தது.
அதனால் போருக்கான அனைத்து ஆட்பலத் தேவையினையும் வன்னியில் வாழ்ந்து வந்த மக்கள் மத்தியில் இருந்துதான் பெற்றுக்கொள்ள வேண்டிய நிலையிருந்தது.
வீட்டுக்கொருவர் நாட்டைக் காக்க முன்வருவீர் என்ற பரப்புரைத் தளத்தில் இருந்து ஆரம்பித்த இவ் ஆட்சேர்ப்பு, போரின் தீவிரம் கூடக்கூட கட்டாய ஆட்சேர்ப்பு என்ற வடிவத்தை எடுத்தது.
இது போர்க்கள அனுபவம் இல்லாத பெருந்தொகையான போராளிகள் களத்திலே இறங்க வேண்டிய நிலையையும் மக்கள் அதிருப்தியையும் ஏற்படுத்தியது.
சமர்களில் விடுதலைப்புலிகள் அமைப்பு தோல்வியினைத் தழுவிக் கொள்ள ஆட்பற்றாக்குறை முக்கிய காரணமாக அமைந்தது.
மூன்றாவது காரணம் ஆயுதப் பற்றாக்குறை.
புலிகள் இயக்கத்தின் ஜெயசிக்குறுப்போரில் வெளிநாடுகளில் இருந்து கொண்டுவந்து சேர்க்கப்பட்ட ஆயுதத் தளபாடங்கள், குறிப்பாக ஆட்டிலறிகள், மோட்டார்கள் அவற்றுக்குரிய எறிகணைகள் சமர்க்கள வெற்றியில் பெரும் பங்காற்றின.
4ம் கட்ட ஈழப்போரில் ஆயுதங்களைக் கொண்டு வந்து சேர்க்கும் முயற்சியில் புலிகள் அமைப்பால் பெரிதும் வெற்றியடைய முடியவில்லை.
ஆயுதங்களைப் பெற்றுக் கொள்வதிலும் அவற்றைக் கொண்டு வந்து சேர்ப்பதிலும் பெரும் நெருக்கடிகள் ஏற்பட்டன.
அரசுகளின் உருமறைப்புச் செய்யப்பட்ட போலிமுகவர்கள் கைகளிலும் புலிகள் அமைப்பின் ஆயுதக் கொள்வனவு முயற்சிகள் சிக்கிக் கொண்டன.
அமெரிக்க அரசால் உருமறைப்புச் செய்யப்பட்ட இரண்டு வெவ்வேறு முகவர்களிடம் புலிகள் அமைப்பின் ஆயதக் கொள்வனவு முயற்சிகள் ஆதாரங்களுடன் அகப்பட்டுக் கொண்டன.
இவை பகிரங்கமாக வெளிவந்த விடயங்கள். இவற்றை விட வெளிவராத மாட்டுதல்களும் ஏமாற்றங்களும் உள்ளன.
புலிகளின் ஆயுத விநியோகக் கப்பல்கள் கண்காணிக்கப்பட்டுத் தாக்குதல்களுக்கும் உள்ளாகின.
இவற்றுக்கெல்லாம் அனைத்துலக அரசுகள் சிறிலங்கா அரசுக்குத் துணையாக இயங்கிய நிலையும் இம் முயற்சியில் ஈடுபட்ட பலரின் அனுபவக்குறைவும் காரணமாக அமைந்தன.
இதேவேளை, உள்ளுரில் 7 கிலோமீற்றர் தூரம் ஏவக்கூடிய மோட்டார்களையும் அதற்கான எறிகணைகளையும் வடிவமைப்பதில் விடுதலைப்புலிகள் இயக்கம் கணிசமான வெற்றியை அடைந்திருந்தது.
ஆனால் அதனைத் தயாரிப்பு நிலைக்கு கொண்டு வருவதில் தாமதங்கள் ஏற்பட்டிருந்தன.
வெளிநாடுகளில் இருந்து கூடுதல் தரமான எறிகணைகள் வந்து சேரும் என்ற எதிர்பார்ப்பும் இதற்கு ஒரு காரணம். மன்னார் கடற்பரப்பு இராணுவத்தின் கைகளில் வீழ்ந்த பின்னர் தமிழ் நாட்டிலிருந்து தயாரிப்புக்காகக் கொண்டு வந்து சேர்க்கப்படவேண்டிய பொருட்களை உரிய முறையில் கொண்டு வந்து சேர்க்க முடியாமற் போனமையும் இன்னொரு காரணம்.
இவ் ஆயுதப் பற்றாக்குறையும் புலிகள் அமைப்பின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
நான்காவது கருணாவின் பிரிவு.
விடுதலைப்புலிகள் அமைப்பின் ஜெயசிக்குறுச் சமரைத் தலைமை தாங்கி வழிநடாத்திய கருணா, புலிகள் அமைப்பில் இருந்து பிளவுபட்டுப் போனது மூன்று வகைகளில் இராணுவ ரீதியில் புலிகள் அமைப்புக்குப் பாதகமாக அமைந்தது.
கருணா பிளவுபடாது போயிருந்தால் சிறிலங்காப் படைகளால் இலகுவில் வன்னிப்போரை ஆரம்பித்து இருந்திருக்க முடியாது. சமர் நீண்டகாலம் கிழக்குப் பகுதியில் நடைபெற்றிருந்திருக்கக் கூடும். இது வன்னியில் தயாரிப்புகளுக்குக் கூடுதலான காலத்தைக் கொடுத்திருக்கும்.
இப்பிளவு இல்லாது விட்டிருப்பின் ஆட்பலம் சார்ந்தும் புலிகள் அமைப்பு கூடுதல் பலத்தினைப் பெற்றிருக்கும். பிளவின் உடனடி விளைவாக குறைந்தது 3000 போராளிகளையும், இப் பிளவின் காரணமாக உருவாகியிருந்த நிலமைகளால் வருடாவருடம் திரட்டியிருக்கக்கூடிய 1500-2000 போராளிகளையும் புலிகள் இயக்கம் இழந்தது.
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் சகல பலங்களையும் பலவீனங்களையும் கருணாவூடாக உறுதி செய்து கொண்டு போர்த் திட்டங்களை வகுக்கும் வாய்ப்பும் சிறிலங்கா இராணுவ இயந்திரத்துக்கு கருணாவின் பிளவின் ஊடாகக் கிடைத்தது.
'ஓய்வு கொடுக்காது தாக்குங்கள். இழப்புகளைக் கண்டு பின்வாங்காதீர்கள். புலிகளை வெல்வதற்கு இதுவே வழி' என கருணா ஆலோசனை சொன்னதாகத் தகவல் ஒன்று உண்டு.
ஐந்தாவது காரணம் தெற்குப்போரில் ஏற்பட்ட தேக்க நிலை.
தமிழீழப் பகுதிகளில் நடக்கும் போரின் போக்கை அங்கு நடக்கும் சமர்களால் மட்டும் தீர்மானிப்பது புலிகள் அமைப்பின் உத்தியாக இருந்ததில்லை.
சமர்களின் போக்கைத் தீர்மானிப்பதில் தெற்குப் பகுதிகளில் நடைபெறும் தாக்குதல்களுக்கும் ஒரு முக்கிய பாத்திரம் உண்டு.
இத்தகைய தாக்குதல்களின் ஊடாகத் தமிழீழப் பகுதியில் நடைபெறும் போரின் போக்கை மாற்றியமைத்துவிடும் சக்தியும் புலிகள் அமைப்புக்கு இருந்தது.
இவ் விடயத்தில் 4ஆம் கட்டப் போர் தொடர்பாக புலிகள் அமைப்பின் இரு முக்கிய குறிகள் தாக்குதல்களில் இருந்து தப்பித்துக் கொண்டன.
இராணுவத்தளபதி சரத் பொன்சேகா புலிகளின் தாக்குதலில் படுகாயமுற்று அதிஸ்டவசமாகவும் நவீன மருத்துவ வசதிகள் காரணமாகவும் சாவின் விளிம்புவரை சென்று மீண்டு வந்தார்.
பாதுகாப்புச்செயலர் கோத்தபாய ராஜபக்ஸ கடுமையான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் காரணமாகவும் அதிஸ்டம் காரணமாகவும் தாக்குதலில் இருந்து காயங்களின்றி தப்பித்துக் கொண்டார்.
இவர்கள் இருவருமே பின்னர் புலிகள் அமைப்புக்கு எதிரான போரில் தீர்க்கமான பாத்திரம் வகித்தனர்.
இவை மட்டுமன்றி புலிகள் அமைப்பு போரின் போக்கை மாற்றியமைக்கக்கூடிய வகையில் உரிய தாக்குதல்களை தெற்கில் மேற்கொள்வதில் தேக்கம் காணப்பட்டது.
விமானத் தாக்குதல்களும் அனுராதபுர விமானப்படைத் தாக்குதலுமே குறிப்பிடத்தக்க தாக்குதல்களாக அமைந்தன.
இவையும் போரின் போக்கை மாற்றியமைக்கக் கூடிவையாக அமையவில்லை.
மேலும், தாக்குதல்கள் தவிர்ந்த பணய நடவடிக்கைகள் எதனையும் விடுதலைப்புலிகள் தெற்குப்போரில் பயன்படுத்த முனையவில்லை.
தெற்கில் உள்ள முக்கியமான நீர்நிலைகள், ஆலைகள் போன்ற கேந்திர முக்கியமான இடங்களைக் கைப்பற்றி இவற்றை போரை நிறுத்துவதற்கான பணயமாகப் பயன்படுத்துமாறு தெரிவிக்கப்பட்ட ஆலோசனைகளை விடுதலைப்புலிகள் ஏற்க மறுத்து விட்டதாகவும் தகவல் ஒன்று உண்டு.
தெற்குத் தாக்குதல்கள் தேக்கமடைந்தமைக்கு சிறிலங்காவின் தற்காப்பு ஏற்பாடுகள் முன்னேற்றம் கண்டிருந்தமையும், புலிகள் அமைப்பின் தெற்குத் தாக்குதற் திட்டப் பொறிமுறையில் ஏற்பட்ட நிர்வாகச் சிக்கல்களும் காரணங்களாகக் கூறப்படுகின்றன.
ஆறாவது காரணம் புலிகளின் தாக்குதல் இலக்குத் தெரிவுகளில் ஏற்பட்ட தந்திரோபாயத் தவறுகள்.
2006 ஆம் ஆண்டு புலிகள் அமைப்பு மூதூரினை நோக்கியும் யாழ்ப்பாணத்தினை நோக்கியும் தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது.
மூதூரினைக் கைப்பற்றுவது திருகோணமலையினைத் தம்வசப்படுத்த உதவும் என்பதும் யாழ்ப்பாண மீட்பு போராட்டத்தை முன்னோக்கி நகர்த்துவதற்கான வளங்களையும் வாய்ப்புக்களையும் தரும் என்பதும் இத் தெரிவுகளுக்கு அடிப்படைகளாக அமைந்தன.
மூதூரின் குடிசனப் பரம்பல் புலிகள் அமைப்புக்கு சாதகமாக இல்லாது இருந்தமையாலும், யாழ்ப்பாணத் தாக்குதலின் பரிமாணம் புலிகளின் கணிப்புக்கும் சக்திக்கும் மீறியதாக இருந்தமையாலும் இத் தாக்குதல்களில் புலிகள் அமைப்பு வெற்றியினைப் பெறமுடியவில்லை.
இத் தெரிவுகளுக்குப் பதிலாக மன்னாரைக் கைப்பற்றுவதற்கும் மணலாறைக் கைப்பற்றுவதற்குமான திட்டங்களும் ஆராயப்பட்டிருந்தன. மன்னாரைக் கைப்பற்றுவதற்கான திட்டம் தளபதி பால்ராஜினால் முன்வைக்கப்பட்டிருந்தது.
மன்னார், மணலாறு போன்றவற்றைக் கைப்பற்றும் திட்டங்கள் வெவ்வேறு காரணங்களால் தெரிவுகளுக்குள்ளாக்கப்படவில்லை.
திட்டத் தெரிவுகள் மாறி அமைந்திருந்து அவை வெற்றி பெற்றிருப்பின் அவை போரின் போக்கில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கவும்கூடும்.
ஏழாவது காரணம் சிங்களத்தின் போர் உளவியல் பாதிப்படையாத நிலை சார்ந்தது.
போரைக் கொண்டு நடாத்துவதில் அதற்கான உளவியலும் பெரும் பங்கு வகிப்பதுண்டு.
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் சிங்களத்தின் போர் உளவியலில் பெரும் தாக்கத்தைச் செலுத்தி வந்த காரணிகளில் தராகி சிவராமின் இராணுவ ஆய்வுகளுக்கு முக்கிய பங்கு உண்டு.
இவரது எழுத்துக்களில் தெரிவிக்கப்பட்டு வந்த கருத்துக்கள் போர் தொடர்பான சிங்கள கொள்கை வகுப்பாளர்களிடம் கணிசமான உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.
இதற்கு சிங்கள கொள்கை வகுப்பாளர்களும் அரசியல் முடிவுகளில் செல்வாக்குச் செலுத்தும் சிங்கள மேற்தட்டு வர்க்கமும் சிவராமின் கருத்துக்களை சீரிய முறையில் கவனத்துக்கெடுக்கும் நிலை இருந்தமையும் ஒரு முக்கிய காரணம்.
புலிகளுக்குச் சார்பான இத்தகைய ஒரு உளவியல் தாக்கத்தை வேறு எந்தவொரு எழுத்தாளராலும் மேற்கொண்டிருக்கவும் முடியாது.
இத்தகைய உளவியல் தாக்கம் புலிகள் அமைப்புக்கு இராணுவ ரீதியில் ஒரு சாதகமான விடயமாக இருந்து வந்தது.
தராகி சிவராம் படுகொலை செய்யப்பட்டமை போர் தொடர்பான சிங்கள கொள்கை வகுப்பாளர்களின் உளவியலில் ஏற்பட்டிருக்கக்கூடிய எதிர்மறைத் தாக்கத்தை கணிசமாகக் குறைத்தது.
புலிகளின் முன்னாள் தளபதி கருணா சிங்கள அரசுடன் இணைந்திருந்தமையும் இவ் உளவியல் பாதிக்கப்படாமல் இருந்தமைக்கு ஒரு காரணமாகும்.
எட்டாவது காரணம் புலிகள் அமைப்பின் கெரில்லாப் போர்முறைத் தகமையில் ஏற்பட்ட வீழ்ச்சி.
புலிகள் அமைப்பு மரபுப் படையணிகளைக் கொண்டிருந்தபோதும் ஒரு முழுமையான மரபுப் படையாக இயங்குவதற்குத் தேவையான போதிய வளங்களைத் தன்னகத்தே கொண்டிருக்கவில்லை.
இதனால் தேவையான நேரம் கெரில்லா அமைப்பாக இயங்குவதற்குத் தேவையான முறையில் வடிவமாற்றம் செய்யக்கூடிய தகைநிலையைக் கொண்டிருத்தல் மிகவும் முக்கியமானது.
நிலப்பரப்பினைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து, தமிழீழ அரச கட்டமைப்பையும் மரபுப் படையணிகளையும் வளர்த்தெடுக்கத் தொடங்கிய பின்னர் புலிகள் அமைப்பின் கெரில்லாவாக மாற்றமடையக்கூடிய மாறுபடுநிலை பலவீனமடையத் தொடங்கியது.
தாம் விரும்பினாலும்கூட ஒரு கெரில்லா அமைப்பாக மாற்றமடைவதற்கு பல்வேறு வகையான தடைகள் புலிகள் அமைப்புக்குள் இருந்தன.
இந் நெகிழ்வுக்குறைவு இராணுவரீதியில் 4 ஆம் கட்டப்போரில் புலிகள் அமைப்புக்கு பாதகமாக அமைந்தது.
ஒன்பதாவது காரணம் போர் நடைபெறும்போது அதனை கௌரவமான முறையில் இடைநிறுத்துவதற்கு உரிய அரசியல் நகர்வுகள் உரிய நேரங்களில் போதிய அளவில் மேற்கொள்ளப்படாமை.
போரின் போக்கு எதிர்மறையாகப் போகப்போவதனை முன்னுணர்ந்து அரசியல் ரீதியில் இராணுவத் தோல்வியினைத் தடுப்பதற்கு உரிய முயற்சிகளை 2007 இன் இறுதிப் பகுதியிலோ அல்லது 2008 இன் ஆரம்பங்களிலேயோ மேற்கொள்ளப்பட்டிருப்பின் கௌரவமான முறையில் போர் நிறுத்தம் மற்றும் பேச்சுவார்த்தைகளைக் கொண்டு வருவதற்கான வாய்ப்புக்கள் கிடைத்திருக்கக்கூடும்.
புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் உயிரோடு இருந்திருப்பின் நிச்சயம் இம் முயற்சியினை முன்னெடுக்க முனைந்திருப்பார்.
பத்தாவது காரணம் சிறிலங்கா அரசின் மிகவும் தீர்க்கமான, அரசியல் இராணுவரீதியல் ஒருங்கிணைக்கப்பட்ட, புதிய உத்திகளும் உள்ளடக்கப்பட்ட போர்நடவடிக்கையும் அதற்குரிய அனைத்துலக உறவு ஏற்பாடுகளும்.
இப் பத்தாவது காரணம் தனித்த ஒரு அங்கத்தில் நோக்கப்பட வேண்டியது.
இங்கு குறிப்பிடப்பட்ட 10 காரணங்களும் போரில் புலிகள் அமைப்பு தோல்வியினைத் தழுவுவதற்கு ஒன்றோடு ஒன்று இணைந்த வகையில் காரணமாக அமைந்தன.
கட்டுரையில் காரணங்கள் தரப்பட்ட ஒழுங்குமுறை அவற்றின் முக்கியத்துவம் கருதிய வகையில் மேற்கொள்ளப்பட்டதல்ல.
ஓவ்வொரு காரணமும் மிக விரிவாகவும் ஆராயப்படக்கூடியது. கட்டுரையின் இடவசதி கருதி மிகச் சுருக்கமாகவே இவை குறிக்கப்பட்டுள்ளன.
(தொடரும்)